ஒவ்வாமை உள்ளவர்கள் Pfizer-ஐ தவிர்க்க வேண்டும்

ஒவ்வாமை உள்ளவர்கள் Pfizer-BioNTech தடுப்பூசியை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

by Bella Dalima 11-12-2020 | 4:22 PM
Colombo (News 1st) பிரிட்டனின் Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதையடுத்து, ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அவா்களில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை உடல் ஏற்பதில் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒவ்வாமை நோய் (அனஃபிலாக்ஸிஸ்) உடையவா்கள், கொரோனா தடுப்பூசியைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நோயுடைய பெரும்பாலானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பூசியால் அந்த நோய்த்தொற்று பரவல் தடுக்கப்படும் என்ற நன்மையோடு ஒப்பிடுகையில், ஒவ்வாமை அபாயத்தால் ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகச் சிறியதே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. MHRA-வின் மிகக் கடுமையான பாதுகாப்பு செயல்திறன் தரக் கட்டுப்பாடுகளை நிறைவு செய்த பிறகே Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குச் செலுத்தப்படுகிறது. எனவே, அந்தத் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை என்று மருந்துகள் மற்றும் சுகாதார சேவைப் பொருட்கள் ஒழுங்காற்று அமைப்பின் (MHRA) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.