இந்திய படகுகள் மீன் பிடிப்பதை கடற்படை பார்த்துக்கொண்டிருக்கிறது: முல்லைத்தீவு மீனவர்கள் குற்றச்சாட்டு

by Bella Dalima 11-12-2020 | 9:29 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு இன்று மேற்கொண்ட முயற்சி அதிகாரிகளின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களை விரட்டும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மீனவர்கள் இன்று முயற்சித்தனர். சுமார் 25 படகுகளில் கடலுக்கு செல்வதற்கு மீனவர்கள் தயாராகினர். இதன்போது, குறித்த பகுதிக்கு வருகைதந்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபரும் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பணிப்பாளரும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து மீனவர்களின் முயற்சி கைவிடப்பட்டது. இதன்போது, இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர்களை விரட்ட நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். மேலும், இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் அத்துமீறலை பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். கடற்படையினருடன் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அதிகாரிகள் இதன்போது வாக்குறுதியளித்தனர். மேலும், இது இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்சினை என்பதால், இராஜதந்திர அணுகுமுறையைக் கையாள வேண்டும் என மீனவர்களுக்கு தௌிவுபடுத்தினர். மீனவர் பிரச்சினை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி தீர்வினைப் பெற்றுத்தருவதாக மேலதிக அரசாங்க அதிபர் உறுதியளித்தமையைத் தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.