வடக்கு, கிழக்கில் வலுப்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள்

by Staff Writer 10-12-2020 | 1:08 PM
Colombo (News 1st) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பாகங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டத்தின் இறுதியில் ஐ.நாவுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக பிரநிதிக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைதி ஊர்வலத்தை முன்னெடுத்தனர். மன்னார் டெலிகொம் சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட அமைதி ஊர்வலம் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக மன்னார் பஸார் வீதி வரை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது. மேலும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேநேரம், திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று அன்புவளிபுரம் ஞான பைரவர் ஆலய முன்றலில் நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.