தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிக்க நடவடிக்கை

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிக்க நடவடிக்கை

by Staff Writer 10-12-2020 | 1:35 PM
Colombo (News 1st) கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை விரைவுபடுத்தியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (09) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு - 15 முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி இதன்போது கூறியுள்ளார். இந்த பகுதிகளில் சுமார் 14 தொடர்மாடி குடியிருப்புகள் 06 வாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த தொடர்மாடி குடியிருப்புகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய, தொடர்மாடி குடியிருப்புகளில் இதுவரை PCR அல்லது அன்டிஜன் சோதனைகளை மேற்கொள்ளாதவர்களுக்கு விரைவாக அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேவையற்ற வகையில் தேசிய வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறு பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்தது. இதன்பிரகாரம், திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளிலிருந்து பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 26,516 ஆக அதிகரித்துள்ளது.