ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் உரிமைகள் மறுக்கப்படுவதாக சுமந்திரன் தெரிவிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் உரிமைகள் மறுக்கப்படுவதாக சுமந்திரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2020 | 7:01 pm

Colombo (News 1st) அடிப்படைவாதத்திற்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு CID-யினர் பொறுப்பிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர விலகியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணத்தினால் மனு மீதான பரிசீலனையிலிருந்து தாம் விலகுவதாக தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மன்றில் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் இதுவரை சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குறித்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறும், அவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க உத்தரவிடுமாறும் கோரி சட்டத்தரணி சலன பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்றைய அமர்வின் போது கருத்து வௌியிட்டிருந்தார்.

சட்டத்துறையில் தேர்ச்சி பெற்ற சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் உரிமை 8 மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

அவர் ஏதேனும் ஒரு சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால், குற்றச்சாட்டிற்கு போதுமான சாட்சி காணப்பட்டால், 8 மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

அவர் கைது செய்யப்பட்ட போது, அவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, அவரின் சேவை பெறுநரின் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் அடங்கிய இரண்டு கோப்புகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. சேவை பெறுநர் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் நீதிமன்றம் கூட கேள்வி எழுப்பாது

என அவர் சுட்டிக்காட்டினார்.

எடுத்துச்செல்லப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் கண்டறியப்பட்டிருந்தால், அது தொடர்பில் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுமந்திரன் வினவினார்.

ஒரு பாடசாலை தொடர்பிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்று வரை அந்த பாடசாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் வேறு எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், இந்த பாடசாலை தொடர்பிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது நகைச்சுவையாக உள்ளது

என அவர் மேலும் கூறினார்.

ஹிஜாஸ் ஹில்புல்லாவிற்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் காணப்படுமாயின், அது குறித்து விசாரணை மேற்கொண்டு , சாட்சியங்களை பதிவு செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு சுதந்திரத்தை வழங்குமாறும் சுமந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்