உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன

by Staff Writer 10-12-2020 | 5:29 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது உயிரிழந்த அனைத்து கைதிகளின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்த 11 கைதிகளின் உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். சடலங்கள் மீதான பிரேத பரிசோதனையை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். மஹர சிறைச்சாலையில் கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே இவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த கைதிகளில் இருவர் மினுவங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள். பியகம பகுதியை சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். ஏனைய ஏழு பேரும் ஜா-எல, என்டேரமுல்ல, வெலிவேரிய, அங்குருவாத்தோட்ட, வத்தளை- உனுபிட்டிய, களனி மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளை சேர்ந்தவர்களாவர். உயிரிழந்துள்ள அனைத்து கைதிகளும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.