மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடல் - பசில் ராஜபக்ஸ

by Staff Writer 09-12-2020 | 2:14 PM
Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் நடாத்தப்படுவதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலை பழைய முறையில் அல்லது தேர்தலை நடாத்துவதற்குறிய ஒழுங்குமுறைகளை மேற்கொள்ளுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார். மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்த தலையீடு செய்யுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை அங்கத்தவர்களால் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரண்டரை வருடங்களுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபை செயற்படுவதால் மக்கள் பாரியளவில் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடனேயே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மாகாண சபைகளுக்கான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். எனினும், சட்ட சிக்கல்களை நீக்கி பழைய முறையிலோ அல்லது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுவருவதாக பொது சேவை மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இந்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.