by Staff Writer 09-12-2020 | 5:51 PM
Colombo (News 1st) மஹர சிறையில் உயிரிழந்த 11 கைதிகளினதும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு ஐவரடங்கிய நிபுணர் குழுவிற்கு வத்தளை நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டுள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சடலங்களை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கொழும்பு IDH வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த 11 கைதிகளில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்களை எரிக்க அனுமதியளிக்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
குறித்த சடலங்கள் குற்ற விசாரணைக்கு பயன்படுத்தப்படும் என்பதால், நிபுணர் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அது தொடர்பில் தீர்ப்பளிக்க முடியாதென நீதவான் தெரிவித்தார்.
அமைதியின்மை மற்றும் உயிரிழப்புகள் எவரினதும் தலையீட்டில் இடம்பெற்றதா, அமைதியின்மை இடம்பெற்ற போது கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் தனிப்பட்ட பாதுகாப்பு எல்லையை மீறி செயற்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முறையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா என அரச சிரேஷ்ட சட்டத்தரணி கேள்வியெழுப்பினார்.
இதனிடையே, அமைதியின்மையின் போது மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அரச மதிப்பீட்டு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.