ஊழலை அழிப்பது அரசின் தலையாய கடமை - ஜனாதிபதி 

ஊழலற்ற சிறந்த தேசத்தை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி கோரிக்கை 

by Staff Writer 09-12-2020 | 7:11 AM
Colombo (News 1st) வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போரடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை வலுவூட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பது தமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக கருதுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். சர்வதேச ஊழல் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பெரும்பான்மை பலத்துடன் தனது வெற்றியை ஆதரித்த போது ஊழல் இல்லாத வினைத்திறனான நாட்டிற்காக தங்களின் விருப்பத்தினையும் வலுவான ஆதரவினையும் நாட்டு மக்கள் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச சேவைகளை திறம்பட பெறுவதற்கான உரிமைகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் இலஞ்ச கோரிக்கைகளை எதிர்க்கவும் அரசின் நிர்வாக பொறிமுறைகளில் அதிக பங்கேற்பு மற்றும் செயற்றிறன் மிக்க பாத்திரத்தை ஏற்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலஞ்ச ஊழல் பற்றிய சம்பவங்களை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிப்பதன் ஊடாக குடிமக்களுக்கான கடமையை உரிய வகையில் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். ஊழல் கலாசாரத்தில் இருந்து நாட்டை விடுவித்து ஒரு சிறந்த தேசத்தை அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.