நாட்டு வைத்தியரின் COVID தடுப்பு மருந்தைப் பெற கேகாலையில் குவியும் மக்கள்

by Bella Dalima 08-12-2020 | 8:21 PM
Colombo (News 1st) COVID வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஔடதத்தை தம்மிக்க பண்டார மக்களுக்கு இன்று இலவசமாக பகிர்ந்தளித்தார். நாட்டு வைத்தியரான தம்மிக பண்டாரவின் COVID தடுப்பு ஔடதத்தை பெற்றுக்கொள்வதற்காக இன்று அதிகாலை முதல் கேகாலை, ஹெட்டிமுல்ல, உடமாகம பிரதேசங்களில் இருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர். சமய வழிபாடுகளின் பின்னர் ஔடதத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கும் கைங்கரியம் முன்னெடுக்கப்பட்டது. மத குருமார்கள், பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் என பல பிரதேசங்களிலிருந்து வருகை தந்த பெரும்பாலானோருக்கு ஔடதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், அவ்விடத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் செயற்பட்டதை தாம் அவதானித்ததாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்மகுமார் விக்ரமரத்ன தெரிவித்தார். குறித்த ஔடதம் குறித்து சுகாதார அமைச்சு இன்னும் பரிசோதனை நடத்தி வருவதால், அது பற்றி தம்மால் எதனையும் உறுதியாகக் கூற முடியாது என அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறான செயற்பாட்டின் மூலம் கேகாலை மாவட்டத்தில் பாரியதொரு அபாய நிலைமை ஏற்படக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டார். எனவே, அவ்விடத்தில் கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டினார். தம்மிக பண்டாரவின் COVID தடுப்பு மருந்து ரஜரட்ட பல்கலைக்கழகத்தை அண்மித்து பரிசோதிக்கப்படுவதாகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் அதுகுறித்த முழுமையான பெறுபேறு கிடைக்கும் என நம்புவதாகவும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அந்த மருந்து வெற்றியளித்தால் அதனை கண்டுபிடித்தவரின் கதைகள் நமக்கு எதற்கு? அவருக்கு காளி அம்மன் கூறியதாக அவர் கூறுகின்றார். மருந்து சரியாக இருந்தால், அதனை ஏற்க வேண்டிவரும். காளி அம்மனை விஞ்ஞானத்தில் போய் தேட முடியாது
என விமல் வீரவன்ச மேலும் கூறினார்.