திருப்புமுனையாக அமையவுள்ள கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து திருப்புமுனையாக அமையுமென எதிர்வுகூறல்

by Staff Writer 08-12-2020 | 7:05 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முதலாவது தடுப்பு மருந்து பாரிய திருப்புமுனையாக இருக்குமென தேசிய சுகாதார சேவைகளின் இங்கிலாந்துக்கான நிறைவேற்று அதிகாரி சேர் சைமன் ஸ்டீவென்ஸ் (Sir Simon Stevens) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். பிரித்தானிய மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாடு இன்றைய தினத்திலிருந்து, அடுத்த இளவேனிற்காலம் வரையாவது முன்னெடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தடுப்பு மருந்து வழங்கப்படுமென சுகாதார செயலாளர் மட் ஹன்கொக் ட்விட் செய்துள்ளார். இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக 50 வைத்தியசாலைகள் இங்கிலாந்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்திலும் இந்த தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. பிரித்தானிய வரலாற்றிலேயே தடுப்பு மருந்து வழங்கும் மிகப்பாரிய திட்டம் இதுவென தேசிய சுகாதார சேவைகளின் இங்கிலாந்துக்கான நிறைவேற்று அதிகாரி சேர் சைமன் ஸ்டீவென்ஸ் குறிப்பிட்டார்.