மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை

எல்லை தாண்டிய மீன்பிடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள்

by Chandrasekaram Chandravadani 08-12-2020 | 2:05 PM
Colombo (News 1st) இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை இம்மாத இறுதிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களினால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் எல்லை தாண்டிய செயற்பாடுகள், பயன்படுத்தப்படுகின்ற சட்டவிரோத தொழில் முறைகளினால் கடல் வளம் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை தவிர, பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1,500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொரோனா தொற்றினால் நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே, இவர்களை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் இணக்கம் தெரிவித்ததாக கடற்றொழில் அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.