பொது பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் இராஜினாமா

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா

by Staff Writer 08-12-2020 | 7:37 PM
Colombo (News 1st) இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளனர். ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் கபில பெரேரா இதனை உறுதிப்படுத்தினார். தாம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நிதி அமைச்சின் செயலாளரிடம் இராஜினாமா கடிதத்தை இன்று மாலை கையளித்ததாக பேராசிரியர் கபில பெரேரா கூறினார். இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் கித்சிறி லியனகே செயற்பட்டதுடன் சந்திரா ஏக்கநாயக்க உப தலைராக செயற்பட்டார். கலாநிதி நிஷான் டி மெல் மற்றும் சதுன் கமகே ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் ஒரு தவணைக்கான பதவிக்காலம் 05 வருடங்களாகும். இந்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இராஜினாமா செய்தாலேயொழிய, ஏதேனும் ஒரு முறைகேடு தொடர்பிலான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றுவதன் மூலமே அவர்களை பதவியிலிருந்து நீக்க முடியும். மின்சக்தி துறையின் ஒழுங்குபடுத்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவை மூடுமாறு கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியின் செயலாளரால் திறைசேரி செயலாளருக்கு கடிதம் அனுப்பியமை சர்ச்சைக்கு வித்திட்டிருந்தது. ஆணைக்குழுவிற்கு விடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் தொடர்பில் கொழும்பில் சில அமைப்புகள் இன்று கருத்துக்களை தெரிவித்ததுடன், அமைச்சரவையிலும் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.