விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2020 | 4:50 pm

Colombo (News 1st) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் விவசாயிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 13 ஆவது நாளாக தொடர்கிறது.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நாளை (09) மீண்டும் 6 ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், புதிய திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முன்னரே அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி, ஜார்க்கண்ட் முக்தி மோட்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

வங்கி ஊழியர்கள், அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய 2 ரயில்வே சங்கங்கள், மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என பலரும் “பாரத் பந்த்” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்