வட மாகாணத்தில் 91,022 பேர் நிர்க்கதி

வட மாகாணத்தில் 91,022 பேர் நிர்க்கதி

by Fazlullah Mubarak 07-12-2020 | 5:58 PM

நிலவும் கடும் மழையுடனான வானிலையால் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,022 ஆக அதிகரித்துள்ளது.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் ​சேர்ந்த 27,613 குடும்பங்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அடை மழையினால் கெற்பேலி மத்தி கிராமசேவையாளர் பிரிவில் 165 குடும்பங்களை சேர்ந்த 482 பேரும் கொடிகாமம் மத்தி கிராமசேவையாளர் பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 279 பேரும் நாவற்குழி மேற்கில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 336 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கெற்பேலி மத்தி கிராமசேவையாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ‘இடைத்தங்கல் முகாம்கள்’ எவையும் அமைக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தென்மராட்சி பிரதேச மேட்டுநில பயிர்கள் அழிவடைந்துள்ளன. தானிய வகைகள் மற்றும் மரக்கறிப் பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருநகர், அரியாலை ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். கடும் மழையால் வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 500 ஏக்கர் வயல் நிலம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்தமையினால் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துபுரம் பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னகர் பகுதியில் 72 இந்தியன் வீட்டு திட்ட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் வீடுகளின் அத்திவாரங்கள் அரித்த நிலையில் காணப்படுகின்றன. இதன் காரணமாக வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் சுவர்கள் வெடித்த நிலையில் காணப்படுவதனால் வசிப்பதற்காக அஞ்சுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு மற்றும் கனகாம்பிகைக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். இதேவேளை மன்னார் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.