by Fazlullah Mubarak 06-12-2020 | 7:44 PM
யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்ந்துவரும் மழை காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் 2,260 குடும்பங்களை சேர்ந்த 7,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 54 குடும்பங்களை சேர்ந்த 198 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி சக்தி அம்மன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, உதயசூரியன் பொதுநோக்கு மண்டபம், நுணாவில் சரஸ்வதி வித்தியாலயம், கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட்டுவில் மகா வித்தியாலயம் ஆகிய 5 இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொடிகாமம் மத்தி மற்றும் நாவற்குழி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், வெள்ளம் நிரம்பிய வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
COVID -19 தொற்று மற்றும் திருடர்கள் தொடர்பிலான அச்சம் காரணமாக தாம் முகாம்களுக்கு செல்லவில்லை என தெரிவிக்கும் மக்கள் இதனால் தமக்கு நிவாரணங்கள் மறுக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
தொடரும் மழையுடனான வானிலையினால் நெடுந்தீவின் கரையோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மீனவ படகுகள் சேதமடைந்துள்ளதுடன் வலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நெடுந்தீவு 6 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்டசுமார் 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
நெடுந்தீவில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 62 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
வேலணை பிரதேச செயலகத்திற்குபட்ட புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 386 பேர் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 குடும்பங்களை சேர்ந்தவர்கள் புங்குடுதீவு மகாவித்தியாலத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பிரதான வீதியில் காணப்படும் புங்குடுதீவு பாலம் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்ட இளவாலை சேந்தான்குளம் பகுதியில் கரையோரமாக வாழ்கின்ற 24 குடும்பங்கள் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகள் நீரில் மூழ்கியுள்ளமையினால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் 7 குடும்பங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர்.
எனினும் தங்களை வீடுகளுக்கு திரும்புமாறு கிராம உத்தியோகத்தர் அறிவுறுத்தியதாக மக்கள் கவலை வௌியிடுகின்றனர்.
ஒரு குடும்பம் மாத்திரமே பொது நோக்கு மண்டபத்தில் தங்கியிருந்ததால் அவர்களை உறவினர் வீடுகளில் தங்குமாறு தாம் குறிப்பிட்டதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் புத்தளம் - கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பப்பாசி செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரகள்ளி, பூலான்சேனை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் பகுதிகளில் பப்பாசி செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.