விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு குவியும் வாழ்த்துக்கள்

விஜயகாந்த் வியாஸ்கானுக்கு குவியும் வாழ்த்துகள்...

by Staff Writer 05-12-2020 | 8:08 PM
Colombo (News 1st) LPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் Jaffna Stallions அணி சார்பாக திறமையை வெளிப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன. LPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (04) Jaffna Stallions அணி சார்பாக களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் பிரகாசித்தார். வியாஸ்கானின் பந்துவீச்சில் இலங்கையின் நட்சத்திர வீரரான முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்தார். இதுவரை காலமும் வடக்கின் பெருஞ் சமரிலும் பாடசாலை மட்டத்திலும் விளையாடிய வியாஸ்காந்திற்கு இது முதலாவது சர்வதேச மட்ட விக்கெட்டாகும். 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். சர்வதேச நட்சத்திர வீரரான ஒன்ரே ரஸல் உள்ளிட்ட வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய வியாஸ்காந்த் 4 ஓவர்களில் ஓட்டமற்ற 10 பந்துகளையும் வீசியிருந்தார். யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், கடந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த முதலாவது வீரராக சரித்திரம் படைக்கும் வாய்ப்பும் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு கிட்டியுள்ளது.