by Staff Writer 05-12-2020 | 7:56 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஆளுந்தரப்பிலுள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை இன்று சந்தித்தனர்.
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதுபாண்டி இராமேஷ்வரன் ஆகியோர் நீதி அமைச்சரிடம் தமது மகஜரை கையளித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட முடியும் என இதன்போது நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படுமாயின் துரித நடவடிக்கை எடுக்க முடியும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கைதிகளின் விடுதலை மாத்திரமின்றி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் எடுத்துச்செல்வதற்கு நீதி அமைச்சர் தலைமை தாங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி இணக்கம் தெரிவித்துள்ளார்.