by Staff Writer 05-12-2020 | 2:47 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கரவெட்டி நுணுவில் பகுதியில் குளத்தில் வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
18 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
தனது நண்பர்களுடன் குளக்கரைக்கு சென்ற போது நேற்று மாலை 05 மணியவில் குறித்த இளைஞன் குளத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,
இதேவேளை, மட்டக்களப்பு - காத்தான்குடி கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் பூநொச்சிமுனை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
இன்று (05) காலை சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறினர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி ஆறாம் குறிஞ்சி கடலில் மூன்று இளைஞர்கள் நேற்று மாலை குளிக்கச் சென்ற போது அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காத்தான்குடி பதுறியா பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனே காணாமல் போனதுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.