Burevi அனர்த்தத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

Burevi அனர்த்தத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு ; 6 பேர் காயம்

by Staff Writer 04-12-2020 | 6:58 PM
Colombo (News 1st) Burevi சூறாவளியால் 70,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களை சேர்ந்த 21,152 குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்துள்ளனர். Burevi சூறாவளியால் யாழ். மாவட்டமே அதிகளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. நெடுந்தீவிலுள்ள இறங்குதுறை சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார். குளங்களை அண்மித்து வாழும் மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிடுகின்றார். மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வரகுமார் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில் 4,334 பேர் யாழ். மாவட்டத்தில் 54,163 பேர் மன்னார் மாவட்டத்தில் 2,227 குடும்பங்களை சேர்ந்த 7,784 பேர் வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் திருகோணமலை மாவட்டத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த 265 பேர் கேகாலை மாவட்டத்தில் 46 குடும்பங்களை சேர்ந்த 190 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் 62 பேர் பதுளையில் 17 பேர் கண்டியில் 108 பேர் மாத்தளையில் 117 பேர் புத்தளத்தில் 213 குடும்பங்களை சேர்ந்த 703 பேர் அநுராதபுரத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தயிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் குறிப்பிட்டார். வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களின் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மீனவர்களை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக வானிலை அதிகாரி குறிப்பிடுகின்றார்.