Burevi சூறாவளி மன்னார் ஊடாக நகரும் என எதிர்வுகூறல்

Burevi சூறாவளி இன்று மன்னார் வளைகுடாவினூடாக கடக்கவுள்ளதாக எதிர்வுகூறல் 

by Staff Writer 03-12-2020 | 8:42 AM
Colombo (News 1st) Burevi சூறாவளி இன்று (03.12.2020) இலங்கை கரையை கடந்து செல்லவுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடாவின் வடக்கு கரையோரமாக இந்தியாவை நோக்கி Burevi சூறாவளி பயணிக்கவுள்ளது. Burevi சூறாவளியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி வரையான காலப்பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 222 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் பதிவாகியுள்ளது. ஒட்டுச்சுட்டான் பகுதியில் 200.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி வரை யாழ்ப்பாணத்தில் 194.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனை தவிர பதவிய ஹபுர பகுதியில் 193 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உடையார்கட்டு பகுதியில் 189 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வெலிஓயா பகுதியில் 180 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Burevi சூறாவளி நேற்றிரவு 10.30 - 11.30 மணி வரையான காலப்பகுதியில் நாட்டின் கிழக்கு கடற்கரையூடாக குச்சவௌி மற்றும் திரியாய் பகுதிகளூடாக நாட்டிற்குள் பிரவேசித்துள்ளது. இந்த சூறாவளியானது இன்று நாட்டை கடந்து செல்லக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.