by Staff Writer 02-12-2020 | 9:00 PM
Colombo (News 1st) Burevi சூறாவளி இன்றிரவு (02.12.2020) 8.45 மணியளவில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளது.
சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு - அலம்பில் பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அங்கு 203.5 மில்லிமீற்றர் மழைவீழச்சி பதிவாகியுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் 158 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வெலி - ஓய பகுதியில் 112 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Burevi சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
10 அடி 6 அங்குலமான கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 6 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்தால் அதிகாலை அளவில் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொக்குத்தெடுவாய் மகாவித்தியாலயம், கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 - 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Burevi சூறாவளி நாளை (03) காலை வேளையில் மன்னார் வளைகுடாவை அண்மிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்பிலும் பூநகரியிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்பிலும் கடல் அலை சுமார் ஒரு மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியம் உள்ளதால் கரையோர தாழ்நிலங்கள் கடல்நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
Burevi சூறாவளியினால் தற்காலிக வீடுகள் மற்றும் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டடங்களுக்கு சேதங்கள் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லுதல், மின்சார மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய மரங்கள் முறிந்து விழக்கூடும் என்பதால் இந்த விடயம் தொடர்பில் அதிக விழிப்புடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், இறங்குதுறைகளிலுள்ள படகுகளுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள நிலை ஏற்படுவதுடன், கரையோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக யாழ். மாவட்ட மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
0773 957 894 மற்றும் 0212 117 117 தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.