மஹர சிறைச்சாலை அமைதியின்மையுடன் தொடர்புடைய கைதிகளுக்கு எதிராக வழக்கு 

மஹர சிறைச்சாலை அமைதியின்மையுடன் தொடர்புடைய கைதிகளுக்கு எதிராக வழக்கு 

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2020 | 10:08 am

Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடைய கைதிகள் அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளை அடையாளங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடைய 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைதியின்மையின் போது சிறைச்சாலை சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மஹர சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 2,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகளும் இரு அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த கைதிகளில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஏனைய இருவரின் PCR பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படும் என கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலையின் வளாகத்தில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்