பிரெஞ்ச் பொலிஸ் பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம்

பிரெஞ்ச் பொலிஸ் பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம்

by Chandrasekaram Chandravadani 01-12-2020 | 9:05 AM
Colombo (News 1st) பொலிஸ் பாதுகாப்பு சட்டமூலத்தை முற்றாக மாற்றியமைக்கவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கறுப்பின நபரொருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டதையடுத்து, பிரான்ஸ் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. சர்ச்சைக்குரியதாக கருதப்படும் பாதுகாப்பு சட்டமூலத்தின் 24 ஆவது சரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதிலும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பொலிஸார் தொடர்பான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை மக்கள் எவ்வாறு பகிரமுடியும் என்பதை ஒழுங்குபடுத்துவதை இலக்காக கொண்டு இந்த சரத்து உருவாக்கப்பட்டிருந்தது. பொலிஸாருடைய அத்துமீறல்களை மக்கள் பகிரங்கப்படுத்துவதை இந்த புதிய சரத்து கட்டுப்படுத்தும் என்ற அச்சநிலை பிரான்ஸில் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.