தற்காலிகமாக மூடப்படும் கிழக்கு மாகாண பாடசாலை‌கள்

கிழக்கு மாகாண அனைத்து பாடசாலை‌களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன 

by Staff Writer 01-12-2020 | 2:08 PM
Colombo (News 1st) சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் நாளை (02) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (04) வரை மூடுமாறு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆலோசனை வழங்கியுள்ளார். மாகாண கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இன்று முற்பகல் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக கிழக்கு கடற்கரையில் ஊடறுக்கவுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாகாண மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் விதத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக பாடசாலைகளை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் ஏற்படக்கூடிய வௌ்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. COVID - 19 தொற்று நிலையை கருத்திற் கொண்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் தனித்தனி குடும்பங்கள் தங்கவைக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான ஆலோசனைகள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.