மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன?

by Bella Dalima 30-11-2020 | 8:36 PM
Colombo (News 1st) நேற்று (29) மாலை 5 மணியளவில் மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. சிறைக்கைதிகள் சிலர் நுழைவாயிலைத் தகர்த்துக்கொண்டு வௌியே செல்ல முயற்சித்த போது மோதல் வலுப்பெற்றதாக பொலிஸார் கூறினர்.​ நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தியதுடன், பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றனர். மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்கள், சம்பவத்தை அறிந்து அந்த இடத்திற்குச் சென்றிருந்தனர். அம்பியூலன்ஸ் அந்தப் பகுதியில் பயணித்த போது, கைதிகளின் உறவினர்கள் அமைதியின்றி செயற்பட்டனர். இரவு 8 மணியளவில் சிறைச்சாலைக்குள் தீ பரவியதுடன், பின்னர் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். மோதலில் 8 கைதிகள் உயிரிழந்ததாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா இன்று மாலை உறுதிப்படுத்தினார். இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு COVID தொற்று உள்ளதா என கண்டறிய வைத்தியசாலையில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு அதிகாரிகள் அடங்கலாக 71 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 15 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். 48 பேருக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை வைத்தியசாலைக்கு சென்ற கைதிகளின் உறவினர்கள் சிலர், பொலிஸ் அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு உறவினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை இன்று மாலை பொலிஸார் வழங்கினர். இந்த நிலையில், சிறைச்சாலையிலிருந்த கைதிகள் சிலர், தனிமைப்படுத்தலுக்காக இன்று மாலை அழைத்துச்செல்லப்பட்டனர். இதன்போதும் அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் சில தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நீதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் , அமைச்சுகளின் செயலாளர்கள் , பொலிஸ் மா அதிபர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் முப்படையின் அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியால் ஐந்து பேரடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உள்ளடங்கலாக நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன சப்புகஸ்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D.சில்வா, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.