தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் சில விடுவிப்பு

by Bella Dalima 29-11-2020 | 3:16 PM
Colombo (News 1st) கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகளில் சில நாளை (30) முதல் விடுவிக்கப்படவுள்ளன. புறக்கோட்டை, மட்டக்குளி மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் நாளை (30) அதிகாலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மட்டக்குளி - ரந்திய உயன, லக்சந்த செவன வீட்டுத்திட்டம், பர்கியூசன் வீதியின் தென் பகுதி, சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை காலை 05 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்படுமென அவர் கூறியுள்ளார். கொழும்பு -15 முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல், கிரான்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, வௌ்ளவீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம சேவையாளர் பிரிவும், பொரளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்லை கிராம சேவையாளர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் ராகம, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளும் நாளை காலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், வத்தளை, பேலியகொடை, களனி பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறுவித்தல் வரை அவ்வாறே காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.