கொரோனா: இதுவரை 23,311 பேருக்கு தொற்று, 109 பேர் மரணம்

by Staff Writer 29-11-2020 | 9:09 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 346 பேர் குணமடைந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 23,311 ஆக அதிகரித்துள்ளது. 6,200 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகவில்லை. இதுவரை 17,002 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதேவேளை, கொரோனாவால் ஏற்பட்ட 2 மரணங்கள் தொடர்பாக நேற்று தகவல் வெளியானது. கொழும்பு 2 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஒருவர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் முற்றிய நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 8 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவர் நவம்பர் 27 ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஆஸ்துமாவுடன் ஏற்பட்ட COVID-19 நிமோனியாவே அவரது மரணத்திற்கு காரணமாகும். அதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 487 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதனைத் தவிர, கம்பஹா மாவட்டத்தில் 78 பேரும், கண்டியில் 15 பேரும், குருநாகலில் 14 பேரும், இரத்தினபுரியில் 14 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக நேற்று அடையாளம் காணப்பட்டனர்.