எஞ்சிய காடுகள் தொடர்பான சுற்றுநிரூபத்திற்கு எதிராக எழுத்தாணை மனு தாக்கல்

by Bella Dalima 29-11-2020 | 8:17 PM
Colombo (News 1st) 5/2001 மற்றும் 2/2006 ஆகிய சுற்றுநிரூபங்களை இரத்து செய்து வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புதிய சுற்றுநிரூபமொன்றை விடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த வித்தானகே நேற்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர், வன இலாகா பணிப்பாளர் நாயகம், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை முதலாம் திகதி விடுக்கப்பட்ட சுற்றுநிரூபம் ஊடாக வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள எஞ்சிய காடுகளை, சேனை பயிர்செய்கை உள்ளிட்ட ஏனைய பொருளாதார நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு கிடைப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் காடுகளை விடுவிக்கும்போது தவிர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக புதிய சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நீரேந்து பகுதிகள், யானைகள் சஞ்சரிக்கும் பகுதிகள், வரலாற்று, கலாசார மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு போதுமான சட்டங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை என மனுதாரர் கூறியுள்ளார். இதன் விளைவாக பொல்லெபெத்த, மஹஓயா, லாஹுகல, நில்கல உள்ளிட்ட பல பகுதிகளில் காடுகளை பல்வேறு தரப்பினர் கைப்பற்றியுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதன் காரணமாக புதிய சுற்றுநிரூபத்தில் உள்ள தீர்மானங்களை இரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.