LPL களத்தில் கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்: முயற்சி திருவினையாக்கும் என நிரூபித்த விஜயராஜ்

by Bella Dalima 27-11-2020 | 9:14 PM
Colombo (News 1st) மக்களின் துயர் துடைப்பதற்காகவே 'மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்' செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தப் பயணத்தின் போது இலைமறை காயாக இருக்கும் திறமை வாய்ந்தவர்கள் அடையாளம் காணப்படுவது வழமை. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட செபஸ்தியான்பிள்ளை விஜயராஜின் கதையே இது. மக்கள் சக்தி இல்லங்கள் தொறும் செயற்றிட்டத்தின் மூலம் விஜயராஜ் அடையாளம் காணப்பட்டார். கிளிநொச்சியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் தகரங்களால் ஆன ஆறரை அடி அறைக்குள் கிரிக்கெட் போட்டியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஒருவரை அன்று மக்கள் சக்தி குழுவினர் சந்தித்தனர்.
நான் போட்டியின் ஓட்ட விபரத்தை அறிவதற்காக அங்கே சென்றேன். விஜயராஜ் மலிங்கவின் பந்துவீச்சை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார். கிரிக்கெட் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா, என்று நான் அவரிடம் கேட்டேன். அப்போது தன்னாலும் வேகமாக பந்து வீச முடியும் என்று அவர் கூறினார்
என அன்றைய நிகழ்வை நினைவுகூர்ந்தார் சதுரங்க ராஜபக்ஸ. மக்கள் சக்தி குழுவினருடன் சதுரங்க ராஜபக்ஸவும் அங்கு சென்றிருந்தார். கிளிநொச்சியில் தாம் வாழுமிடத்தில் கிரிக்கெட் விளையாடுவதிலும் பந்து வீசுவதிலும் அலாதிப் பிரியம் கொண்டவராக இருந்தார் விஜயராஜ். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி விஜயராஜின் பந்துவீச்சை முதல் தடவையாக மக்கள் சக்தி குழுவினர் பார்த்தனர். அதனை அடுத்து நியூஸ்ஃபெஸ்டின் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் அழைப்பிற்கு அமைய, விஜயராஜ் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார். மக்கள் சக்தியூடாக நியூஸ்ஃபெஸ்டினால் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், முக்கிய கழகங்களில் இந்த வீரர் பயிற்சியினைப் பெற்ற போதிலும் சவால்களை எதிர்கொள்வதற்கும் தயாராகவே இருந்தார். சவால்களை முறியடித்து வெற்றிக்காக முன்னேறிக்கொண்டிருந்த விஜயராஜ், கடந்த கொரோனா முடக்க காலப்பகுதியில் தமது பந்துவீச்சு ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பில் தாம் தங்கியிருந்த அறையிலேயே பயிற்சிகளையும் மேற்கொண்டார். கிளிநொச்சியில் சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் தரையில் பந்து வீசிய 'கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்' எனப்படும் விஜயராஜிற்கு LPL கிரிக்கெட் தொடரில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) குழாத்தில் விளையாடும் அரிய வாய்ப்புக் கிட்டியது. சர்வதேச தரத்திற்கு உயரும் முயற்சியின் முதற்கட்டமாகவே LPL களம் காண்கின்றார் விஜயராஜ். அன்று தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த விஜயராஜ் இன்று சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் போட்டியிடத் தயாராகி வருகின்றார். திசர பெரேரா, சொஹைப் மாலிக், அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாண்டோ, கைல் அபொட், மினோத் பானுக்க, சரித் அசலங்க உள்ளிட்ட வீரர்களுடன் மக்கள் சக்தியின் விஜயராஜ் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் குழாத்தில் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, இந்தக் குழாத்தில் யாழ். மாவட்ட வீரர்களான தெய்வேந்திரம் டினோஷன், கனகரத்தினம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஷ்கான் ஆகியோரும் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் குழாத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முயற்சி திருவினையாக்கும் என்பதை மக்கள் சக்தியின் விஜயராஜ் நிகழ்காலத்தில் நிரூபித்துள்ளார்.