டெல்லியில் திரண்டு போராடும் விவசாயிகள்

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு: டெல்லியில் திரண்டு போராடும் விவசாயிகள்

by Bella Dalima 27-11-2020 | 2:21 PM
Colombo (News 1st) இந்திய மத்திய அரசின் புதிய விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு மாநிலங்களின் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்திரபிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் கேரள மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சில இடங்களில் விவசாயிகள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லி - ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியாத வகையில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியன மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது, கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு சாதகமானது எனவும் விவசாயத்தையும் உணவுப் பாதுகாப்பையும் அழிக்கும் எனவும் தெரிவித்து நாடளாவிய ரீதியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.