வரவு செலவுத் திட்டம் தனிநபரின் திட்டமல்ல: பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Staff Writer 27-11-2020 | 8:12 PM
Colombo (News 1st) பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இன்று கூடியது. 'பணியுடன் மீண்டும் கிராமத்திற்கு' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மாகாண மட்டத்தில் நடைபெறும் கூட்டத்தொடரை அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. இம்முறை வரவு செலவுத் திட்டம் தனிநபரின் திட்டமல்ல என்று பசில் ராஜபக்ஸ இதன்போது தெரிவித்தார். நீண்டகாலம் கலந்துரையாடி நாட்டின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலம் தொடர்பாக உரிய தீர்மானங்கள் பல எட்டப்பட்ட வரவு செலவுத் திட்டம் இதுவென பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் கிராமிய மட்டத்திலிருந்து மக்களிடம் கொண்டு சேர்க்கப்படல் வேண்டும் என பசில் ராஜபக்ஸ வலியுறுத்தினார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி, அடுத்த வருடமளவில் சுற்றுலாத்துறையை முன்னேற்ற நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பசில் ராஜபக்ஸ இதன்போது தெரிவித்தார்.