மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார் அஜித் தோவால்

by Staff Writer 27-11-2020 | 8:52 PM
Colombo (News 1st) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். கொழும்பு விஜேராமயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்த்திப்பு இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதற்கான உபாய மார்க்கங்களை கண்டறிய வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இதன்போது தெரிவித்துள்ளார். பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொருளாதார மந்தநிலைக்கு தீர்வைப் பெற்று, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான உபாய மார்க்கங்களை கண்டறிவதற்கான உரையாடலை முன்னெடுப்பதற்கு முன்னிலை வகிக்குமாறு அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய நிதியுதவியில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், வீடமைப்பு திட்டத்தை தெற்கை மையப்படுத்தி ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அஜித் தோவால் இதன்போது கூறியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை இலங்கையிலும் ஆரம்பிக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.