போர் வலயத்திலிருந்து 38 இலங்கையர்கள் வௌியேற்றம்

எத்தியோப்பிய போர் வலயத்திலிருந்து 38 இலங்கையர்கள் பாதுகாப்பாக வௌியேற்றம்

by Bella Dalima 27-11-2020 | 12:00 PM
Colombo (News 1st) எத்தியோப்பியாவின் வடக்கு டிக்ரே பகுதியின் மோதல் வலயத்திலிருந்து 38 இலங்கையர்கள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, மோதல் வலயத்திலிருந்து இலங்கையர்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் உள்ளிட்ட ஏனைய நாடுகளை சேர்ந்த பலர் ஐ.நா சபைக்கு சொந்தமான பாதுகாப்பு வாகனத் தொடரணியில் டிக்ரேயிலிருந்து எதியோப்பியாவின் அபார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த இலங்கையர்கள் அனைவரையும் எதிர்வரும் சில நாட்களில் நாட்டிற்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி இராணுவம், ஃபெடரல் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பின்னர் எத்தியோப்பிய அரசாங்கத்தினால் டிக்ரே வலயத்தில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.