சுகாதார அமைச்சிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக் கடிதம்

சுகாதார அமைச்சிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக் கடிதம்

சுகாதார அமைச்சிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2020 | 6:14 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பிலான வர்த்தமானி மீதான பரிந்துரைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

COVID-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்க முடியாமை தொடர்பில் பல்வேறு மத அமைப்புகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை இறப்பிற்கான உறுதியான ஆதாரங்களின்றி தகனம் செய்வதற்கு பலவந்தப்படுத்துகின்றமை, வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கு தரமான வழிமுறையின்மை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், உயிரிழப்பு விடயங்களை கையாளும் போதான வௌிப்படைத்தன்மையின் அவசியத்தையும் மரணத்திற்கான காரணத்தை அறிவிப்பதற்கான முறையான பொறிமுறையின் அவசியத்தையும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 09 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 35 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 17 உடல்கள் முஸ்லிம்களுடையவை.

சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் பலவந்தமாக வீடுகளில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளாவன…

1. COVID-19 காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை சுகாதார விதிமுறைகளைப் பேணி அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதி வழங்கல்

2. உயிரிழந்தவர்களின் PCR பரிசோதனை அறிக்கை 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படல்

3. வீடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸ் பிரேத அறைக்கு எடுத்துச்செல்வதை நிறுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக தொற்று நீக்கி பேணுவதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்படல்

4. உயிரிழப்பு விடயங்களை கையாளும் போது வௌிப்படைத்தன்மை

– ஒருவரது மரணத்திற்கான காரணத்தை அறிவிப்பதற்கான சரியான பொறிமுறை அவசியம்

– உரிய சுகாதார விதிமுறைகளைப் பேணி உயிரிழந்தவர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்த குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்

5 சடலங்களை கையாளும் முகாமைத்துவ விடயங்களில் அவர்களின் சமூக பிரதிநிதிகளின் பிரசன்னம் உறுதிப்படுத்தப்படல்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்