யாழில் வீடுகளுக்குள் வௌ்ளம்; மட்டக்களப்பில் மினி சூறாவளி

by Staff Writer 26-11-2020 | 9:21 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி மேற்கு, ஐந்து வீட்டுத்திட்டப் பகுதி, சாவகச்சேரி, மகிழங்கேணி, மட்டுவில் வடக்கு கொடிகாமம் , நாவலடி பிரதேசங்களிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக நாவற்குழி மேற்கு ஐந்து வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மகிழங்கேணி கிராமத்தின் ஐந்து குடும்பங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை, தும்பளை பகுதி மக்களும் வௌ்ள அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். வௌ்ள அனர்த்தத்திற்குள்ளான மக்கள் தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில், மட்டக்களப்பில் நேற்று வீசிய மினி சூறாவளியினால் கிரான்குளம் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிரான்குளம் பகுதியிலுள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் சேதமாகியுள்ளதுடன் அங்குள்ள 25 வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.