நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு மேலும் சில நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன

by Staff Writer 26-11-2020 | 5:50 PM
Colombo (News 1st) பொது இடங்களில் ஒன்றுகூடி மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு இன்றும் பல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி பருத்தித்துறை,வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரினால் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், COVID தொற்று காரணமாக பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி கூட்டங்கள் நடத்துவதற்கு நீதவான் இன்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதேவேளை, சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் நெல்லியடி பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்குகொண்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, 08 வழக்குகள் மீதான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட திருகோணமலை நீதவான் நீதிமன்றம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை விதித்துள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை மற்றும் கிண்ணியா தலைமையக பொலிஸார், துறைமுக பொலிசாரினால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது. இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதை தடுக்கும் வகையில் கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் பெறப்பட்ட தடையுத்தரவினை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவுகூர்வதைத் தடுத்து , மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் கடந்த 20 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனின் வீட்டில் கையளிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை நீக்குமாறு கோரி கடந்த 24ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்றபோது இந்த நிகழ்வு விடுதலைப்புலிகளை மீள உருவாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு எனவும் நாட்டில் நிலவும் கொரோனா அபாயம் காரணமாக ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தடை உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.