கால்பந்தாட்ட ஜாம்பவான் டிகோ மரடோனா காலமானார்

கால்பந்தாட்ட ஜாம்பவான் டிகோ மரடோனா காலமானார்

by Bella Dalima 26-11-2020 | 12:13 PM
Colombo (News 1st) அர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் முன்னாள் ஜாம்பவான் டிகோ மரடோனா (Diego Armando Maradona) காலமானார். மாரடைப்பினால் தனது 60 ஆவது வயதில் நேற்றிரவு அவர் காலமானார். மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அண்மையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்தும் வீட்டில் சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனது 16 ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார். 1986 ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவிற்கு இரண்டாவது உலகக்கிண்ணம் கிடைப்பதற்கு மரடோனாவின் அபாரமான ஆட்டம் வழிவகுத்தது. அவர் அர்ஜென்டீன அணிக்காக 91 போட்டிகளில் பங்கேற்று 34 கோல்களைப் போட்டுள்ளார். உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா நான்கு உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனைத் தவிர அவர் பல கழகங்களிலும் விளையாடியுள்ளார். 1997 ஆம் ஆண்டு தனது 37 ஆவது பிறந்த தினத்துடன் கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து, அர்ஜென்டீன அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2008 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதுடன் 2010 உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டீன அணி காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அப்பதவியிலிருந்து விலகிக்கொண்டார். 1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி பிறந்த மரடோனா, இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரராக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றார். டிகோ மரடோனாவின் மரணத்தை அடுத்து அர்ஜென்டீன ஜனாதிபதி அல்படோ பெர்னாண்டஸ் 3 நாள் துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.