கட்டாய தகனம்: அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாய தகனம்: அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2020 | 6:02 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்து சுகாதார அமைச்சர் விடுத்திருந்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி விடுத்திருந்த குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும், இடையீட்டு மனுதாரர்களும் 12 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் மனு மீதான விசாரணைக்கு பிறிதொரு நாளை வழங்குமாறு இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் வேண்டுகோள் விடுத்தனர்.

இஸ்லாம் மதத்திற்கு அமைய உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற போதிலும் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள வர்த்தமானிக்கு அமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் பிரஜைகளையும் தகனம் செய்ய நேரிடுவதால், தாம் உள்ளிட்ட முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சியாம் அமீர் அலி, அப்துல்லா மொஹமட் மஹ்ரூப், ஹுசைன் பைலா உள்ளிட்ட மனுதாரர்கள் உயர் நீதின்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் இன்று நீதியமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

நீதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட அனைதது கட்சிகளின் உறுப்பினர்களும் நீதியமைச்சரை சந்தித்தனர். இதன்போது, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்