மாவீரர் தின நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றங்கள் தடை

by Staff Writer 25-11-2020 | 8:31 PM
Colombo (News 1st) மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு முல்லைத்தீவு மற்றும் யாழ் நீதவான் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாவீரர் தின நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட யாழ். நீதிவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறும் 37 நபர்களுக்கு எதிராகவும் தடை விதிக்குமாறு குறித்த மனுவினூடாக விண்ணப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதவான் ஏ. பீற்றர்போல் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ் சொலிஷிட்ட ஜெனரல் பிரபாகரன் குமாரரட்ணம், ஹரிப்பிரியா ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோர் வழக்கில் முன்னிலையாகினர். இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஏற்றுக் கொண்ட நீதவான், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.