மக்கள் சக்தி ஊடாக அறிமுகமான செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜுக்கு LPL இல் வாய்ப்பு

by Staff Writer 25-11-2020 | 9:09 AM
Colombo (News 1st) லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் JAFFNA STALLIONS அணியில் இணையும் வாய்ப்பு மக்கள் சக்தி ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட 'கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்படும் செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜுக்கு கிடைத்துள்ளது. திஸ்ஸர பெரேராவின் தலைமையிலான JAFFNA STALLIONS அணியில் அவிஸ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, மினோத் பானுக்க ஆகிய வீரர்கள் அடங்குகின்றனர். பாகிஸ்தான் அணியின் ஷொஹீப் மலிக், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன்சன் சாள்ஸ், தென் ஆபிரிக்காவின் டுவென் ஒலிவர் போன்ற முக்கிய வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். செபஸ்தியான்பிள்ளை விஜயராஜ், பயிற்சிகளின்போது வௌிப்படுத்திய திறமை காரணமாக JAFFNA STALLIONS அணியில் இடம்பிடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின்போது விஜயராஜை நாம் கிளிநொச்சியில் சந்தித்தோம். வேகப் பந்துவீச்சில் தனக்கே உரித்தான திறமைகளை கொண்டுள்ள விஜயராஜை சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. பி.ஆர்.சி விளையாட்டுக் கழகம் உள்ளட்ட பல முன்னணி வீரர்களுடன் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மட்டுமல்லாது தமிழ் யூனியன் கழகத்தில் இணைவதற்கான சந்தர்ப்பமும் விஜயராஜுக்கு கிடைத்தது. சனத் ஜயசூரிய, அனூஷ சமரநாயக்க, நுவன் சொய்சா ஆகியோர் செபஸ்தியான்பிள்ளை விஜயராஜுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர். JAFFNA STALLIONS அணியில் தேவேந்திரன் தினோஷன், கனகரத்தினம் கபில்ராஜய், வை. வியஸ்காந்த் ஆகிய புதுமுக வீரர்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.