யாழ். நீதிமன்றால் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது 

யாழ். நீதிமன்றால் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது 

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2020 | 12:28 pm

Colombo (News 1st) சமூக செயற்பாட்டாளர்களான லலித் – குகன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) செல்லுபடியற்றதாக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இந்த அறிவித்தலை பிறப்பித்திருந்தது.

இந்த அறிவித்தலுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் ஆராய்ந்த மேன்முறையீட்டு நிதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.பி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக சாட்சியாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு நீதவானுக்கு அதிகாரம் உள்ள போதிலும், அறிவித்தல் பிறப்பிப்பதற்கான காரணத்தை உரிய வகையில் சாட்சியாளருக்கு வழங்குவதும் நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவ்வேளையில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் உரிய காரணங்கள் சரியான முறையில் குறிப்பிடப்படாமை தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்தியதாகவும் இந்நிலையில் நீதவான் வௌியிட்ட அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுாம் இன்று அறிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்