மன்னாரில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

மன்னாரில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2020 | 8:24 pm

Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ். சிவகரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மன்னார் நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்படியான உத்தரவுகளை கொடுப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் சமர்ப்பணம் செய்திருக்கின்றோம். நீதிமன்றத்திற்கு நியாதிக்கம் இல்லாதபோதிலும் கூட பொறுப்பானவர்கள் என்ற விதத்தில் எந்த சட்டத்தையும் மீற மாட்டோம். சுகாதார வழிமுறைகளை கையாள்வோம், பொது நிகழ்வொன்றை வைத்தால் அதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுச்செய்வோம் என்ற உத்தரவாதங்களையும் நீதிமன்றத்திற்கு இன்றைக்குக் கொடுத்து அந்த தடை உத்தரவுகளை நீக்குமாறு கோரியிருந்தோம். நீதவான் அவர்கள் அந்த தடை உத்தரவை நீக்க மறுத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள், உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிகழ்வுகளை நடத்த முடியாது என்றும் கொவிட் 19 சம்பந்தமாக ஆபத்தான நிலையுள்ளதால் மக்கள் சேர்ந்து வந்தால் அது பரவக்கூடிய சூழ்நிலை இருப்பதாலும், தான் ஏற்கனவே கொடுத்துள்ள உத்தரவுகளை நீடிப்பதாக சொல்லியிருக்கின்றார்

என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையை ஆட்சேபித்து இன்று மற்றுமொரு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிவான் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்