சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 390 பேர் கைது

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 390 பேர் கைது

by Staff Writer 21-11-2020 | 1:14 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் இதுவரை 390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டத்தை மீறுவோர் தொடர்பில் Drone கெமராக்களினூடாக கண்காணிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19,279 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15,700 ஐ தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 08 மாதங்களில் கொழும்பில் 4,920 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் 1500 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் பிரிவு விசேட வைத்திய நிபுணர் தினுகா குருகே தெரிவித்தார். மேலும், இன்று சுமார் 1000 PCR பரிசோதனைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட வைத்தியர்கள் அடங்கிய நடமாடும் சேவை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் தொற்றாநோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளிட்ட நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் குறிப்பிடத்தக்க மரணங்கள், வீடுகளிலேயே பதிவாகியமை தொடர்பில் சுகாதார அமைச்சினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டிய கூறியுள்ளார். இதேவேளை, நேற்றிரவு மற்றுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு - 02 பகுதியை சேர்ந்த 70 வயதான ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோயினால் அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை 74 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.