by Staff Writer 20-11-2020 | 7:57 PM
Colombo (News 1st) பேலியகொடை மெனிங் வர்த்தக சந்தையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று திறந்து வைத்தார்.
நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்த பின்னர் வர்த்தக சந்தையின் கட்டடத் தொகுதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பார்வையிட்டார்.
நான்கு மாடிகளைக் கொண்ட பேலியகொடை மெனிங் வர்த்தக சந்தையில் மூன்றாம் மாடி வரையில் லொறிகள் மற்றும் மரக்கறியினைக் கொண்டு வரும் வசதியுள்ளது.
இந்த வர்த்தக சந்தையில் 1192 கடைகள் இருப்பதுடன், ஒரே தருணத்தில் 600 வாகனங்களை நிறுத்தும் வசதிகளைக் கொண்ட வாகனத் தரிப்பிடமும், ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய நிலையம், வங்கி, சிற்றுண்டிச்சாலை, குளிர்சாதன வசதிகளைக் கொண்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளும் அமைந்துள்ளன.
இந்த திட்டத்திற்காக 6.5 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.