வௌ்ளைத் துணி விநியோக மோசடி வழக்கு: லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட விடுதலை

by Staff Writer 19-11-2020 | 12:07 PM
Colombo (News 1st) லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் வௌ்ளைத் துணி விநியோக மோசடி வழக்கிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் தீர்ப்பு குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன உள்ளிட்ட நீதிபதிகள் குழாத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது. 2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியை செலவிட்டு வௌ்ளைத் துணி விநியோகிக்கப்பட்டமை உள்ளிட்ட 03 குற்றச்சாட்டுகளின் கீழ் மேல் நீதிமன்றத்தினால் அவர்கள் இருவரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர். லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளாக பெயரிட்டு உத்தரவிட்டார். இதன்போது, பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான தண்டப்பணமும் தலா 500 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.