முதலீடுகளே தேவை; கடன்கள் அல்ல: சீன தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 19-11-2020 | 4:43 PM
Colombo (News 1st) நாட்டின் அபிவிருத்திக்காக வௌிநாட்டுக் கடன்களை பெறுவதற்கு பதிலாக முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன புதிய தூதுவர் Qi Zhenhong-இற்கு நற்சான்றுப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். சீனாவை போன்று கிராமிய அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தமது பிரதான நோக்கமென தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான ஒத்துழைப்பை சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இதற்போது, இலங்கையின் அபிவிருத்தியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல சீனாவின் ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக சீன தூதுவர் உறுதியளித்துள்ளார். இலங்கையை வளமான நாடாக மாற்றுவது சீனாவின் அபிலாஷையென அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நீண்ட காலமாக வலுவடைந்து வரும் இருதரப்பு அனுகூலங்களுடன் கூடிய, நிலையான புரிந்துணர்வு மற்றும் நட்புறவு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யுத்த வெற்றியின் பின்னர் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக வீதி உள்ளிட்ட இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு சீனா பெரும் உதவி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை விமர்சித்த சிலர் இந்த திட்டங்கள் பலனற்றவை என கூறியதாக நினைவுகூர்ந்தார். எனினும், அது பொய்த்துப்போயுள்ளதாக ஜனாதிபதி புதிய தூதுவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தனது அபிவிருத்திக்கான பிரயத்தனத்தின் போது தொடர்ந்தும் வௌிநாட்டுக் கடனை பெறுவதற்கு பதிலாக முதலீடுகளை ஈர்ப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அதற்கான விவசாயம், தொடர்பாடல் தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் விரிவான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்தி முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை தமது அரசாங்கம் வழங்கத் தயார் என இதன்போது சீனாவின் புதிய தூதுவர் Qi Zhenhong கூறியுள்ளார்.