கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு

கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு: கொழும்பில் Antigen பரிசோதனைகள் முன்னெடுப்பு

by Staff Writer 19-11-2020 | 12:17 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் நேற்று (18) மூவர் உயிரிழந்துள்ளனர். கந்தானை, கொழும்பு 12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுததிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கந்தானை பகுதியை சேர்ந்த 70 வயதான ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றினால் நீரிழிவு நோய் அதிகரித்தமை மரணத்திற்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 12 ஐ சேர்ந்த 74 வயது பெண் கொரோனா தொற்று உறுதியான நிலையில் ​ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நுரையீரல் கோளாரே இவரது மரணத்திற்கான காரணமாகும். கொழும்பு 13 - ஐ சேர்ந்த 48 வயதான ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோயால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருந்தமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, நேற்று மேலும் 325 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 12 ,582 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,746 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பதிவான மூன்று மரணங்களுடன் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட Rapid Antigen பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளங்காணப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் நிபுணர் தினுகா குருகே தெரிவித்தார். கொழும்பு - 15 முகத்துவாரம் பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு தொகுதிகளை அண்மித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நேற்று Antigen பரிசோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இதனடிப்படையில், 900 PCR பரிசோதனைகளும் 50 Rapid Antigen பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. இவர்களில் 556 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்று காலை கிடைத்ததாகவும் அவர்களில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தினுகா குருகே குறிப்பிட்டார். இவர்களோடு தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.