சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை

அண்மையில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை

by Staff Writer 19-11-2020 | 12:46 PM
Colombo (News 1st) அண்மையில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்தமை, மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்கப்பட்டமை, போகம்பரை சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோடியமை மற்றும் கைதி ஒருவர் உயிரிழந்தமை, வெலிக்கடை, மெகசின் சிறைச்சாலைகளில் கைதிகளால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், விசேட விசாரணைக்குழுவின் அறிக்கையை 3 வாரங்களுக்குள் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரினால் குற்றமிழைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளினூடாக உறுதிப்படுத்தப்பட்டால், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.