இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2020 | 7:49 pm

Colombo (News 1st) இலங்கை தற்போது பின்பற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் பல்வேறு துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம் என்பது ஒரு திசையை நோக்கி மாத்திரம் பயணிப்பது அல்லவென ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, கொழும்பிலுள்ள பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ருமேனியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையிலும் ஐரோப்பிய வர்த்தக நடவடிக்கைகளிலும் நேரடி வௌிநாட்டு முதலீடுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் பொருளாதார மத்திய நிலையமாக மாறும் இலங்கையின் நோக்கத்தை அடைவதற்கு அது தடையாக அமைந்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு எழுந்துள்ள தடை இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இறக்குமதியை கட்டுப்படுத்துவது உலக வர்த்தக சங்கத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவானது அல்லவெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு விடுத்துள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவிற்கும் மேற்பட்ட நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரு தரப்பு மட்டத்திலும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GSP வரிச்சலுகை மூலம் இலங்கைக்கு ஒரு தலைபட்சமான வர்த்தக அனுகூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இதன் காரணமாக இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்